சோதனை மற்றும் விசாரணை என்ற பெயரில் காவல் துறை தங்களை துன்புறுத்தக் கூடாது எனக் கோரி, தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
மனுக்களில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் “குதிரை பேரம்” நடந்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், தங்களுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கப்பட்டதாகவும், அந்த நிபந்தனைகளை கடைப்பிடிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா “கணக்கு தீர்க்க வேண்டும்” என வெளிப்படையாக கூறியதாகவும், ஏதேனும் ஒரு வழக்கில் தங்களை கைது செய்ய காவல் துறைக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். சட்டப்படி நடைபெறும் எந்தப் புலன் விசாரணையையும் தடுக்கவில்லை என்றும், நிலுவையில் உள்ள வழக்குகளில் விசாரணைக்கு தங்கள் தேவை இருந்தால் முறையான நோட்டீஸ் அனுப்ப காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரினர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், குதிரை பேர வழக்கில் முன்ஜாமின் வழங்கப்பட்டிருந்தாலும், மனுதாரர்கள் இன்னும் சரணடைந்து முன்ஜாமின் பெறவில்லை எனக் குறிப்பிட்டார். இந்நிலையில் தங்களை துன்புறுத்தக் கூடாது எனக் கோரி உத்தரவு வழங்க முடியாது என்று கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.





