ஆந்திராவைச் சேர்ந்த 14 வயது அரசுப்பள்ளி மாணவி கண்டூலா ஜெஸ்ஸி, ‘மிஷன் சக்திசாட்’ திட்டத்தின் மூலம் சர்வதேச அளவிலான இளம் அறிவியல் திறமையாளர்கள் குழுவில் இடம் பெற்றுள்ளார்.
பெண்களின் அறிவியல் மற்றும் விண்வெளித் திறனை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட உலகளாவிய முயற்சியே ‘மிஷன் சக்திசாட்’. சென்னையை மையமாகக் கொண்ட விண்வெளி மற்றும் பாதுகாப்பு ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ இதை உருவாக்கியுள்ளது. 108 நாடுகளைச் சேர்ந்த சுமார் 12,000 சிறுமிகள் இதில் பங்கேற்றனர்.
இந்தப் பங்கேற்பாளர்களில் இருந்து 20 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், கிழக்கு கோதாவரி மாவட்டம் தவளேஸ்வரத்தைச் சேர்ந்த ஜெஸ்ஸியும் தேர்வானவர்களில் ஒருவர். ஜெஸ்ஸியின் தந்தை தச்சுத் தொழிலாளி; அவர் அரசுப் பள்ளியில் பயின்று வருகிறார்.
திட்டத்தின் பயிற்சிப் பகுதியாக, விண்கல அமைப்பு, உந்துவிசை, வெப்ப இயக்கவியல் போன்ற கடினமான விண்வெளி அறிவியல் தலைப்புகளில் 550 பயிற்சி வகுப்புகளை ஜெஸ்ஸி வெற்றிகரமாக முடித்துள்ளார்.
தன் அனுபவத்தைப் பகிர்ந்த ஜெஸ்ஸி, தினமும் தொடர்ந்து வகுப்புகளில் கலந்து கொண்டதாகவும், கடின உழைப்பின் மூலம் இஸ்ரோவில் சேரும் கனவை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார். பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கு பெருமை சேர்க்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.





