தமிழக அரசின் ‘முதல்வரின் காலை உணவு திட்டம்’ இனி ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்’ என்ற பெயரில் செயல்படும் வகையில் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை நடைமுறைப்படுத்தும் வகையில் அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

மாநகராட்சி, நகராட்சி, ஊரகம் மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டம் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் சுமார் 1.45 லட்சம் மாணவர்கள் பயனடைந்தனர்.

பின்னர் நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் திட்டம் விரிவாக்கப்பட்டது. தற்போது இந்தத் திட்டத்தின் மூலம் 19.34 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு, முதல்வர் விஜய் உத்தரவின்படி செப்டம்பர் 17 முதல் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை திட்டம் விரிவாக்கப்பட உள்ளது. இதன் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் மேலும் 15.14 லட்சம் பேர் கூடுதலாக பயன் பெறுவர்.

இந்தத் திட்டத்திற்கு ஆண்டுதோறும் 343 கோடி ரூபாய் செலவாகும் என்றும், நடப்பு 2026–27 நிதியாண்டில் 217 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இதற்கான அரசாணையை சமூக நலத் துறை செயலர் பல்லவி பல்தேவ் பிறப்பித்துள்ளார்.