காவிரி மேலாண்மை ஆணையத்தின் (CMA) 53வது கூட்டம் டில்லியில் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா தரப்பு அதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு நீர்வளத்துறை செயலர் சத்யபிரதா சாஹு, ஜூன் 1 முதல் ஜூலை 19 வரை பிலிகுண்டுலு நீரளவை நிலையத்தைத் தாண்டி தமிழகத்திற்கு 3.44 டி.எம்.சி. மட்டுமே கிடைத்ததாக கூறினார். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி வழங்க வேண்டிய 28.3 டி.எம்.சி.யுடன் ஒப்பிடுகையில் இது 12.15% மட்டுமே என்றும், இதனால் 24.8 டி.எம்.சி. பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜூலை 20 நிலவரப்படி கர்நாடகாவின் நான்கு அணைகளில் 48.9 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளதாகவும், மேட்டூர் அணையில் 36.9 டி.எம்.சி. இருப்பினும் நீர்வரத்து மிகக் குறைவாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேட்டூரில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் 1,003 கனஅடி நீர் திறக்கப்படுவதால் பாசனத்திற்கு நீர் வழங்க முடியாத நிலை இருப்பதாகவும், தமிழக பற்றாக்குறையை ஈடு செய்ய கர்நாடகாவை நீர் திறக்க ஆணையம் உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதற்கு கர்நாடகா தரப்பு அதிகாரிகள், மழைப்பொழிவு நிலை மற்றும் வறட்சி காரணமாக பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்காகவே நீர் தேவைப்படுவதால் தற்போது தமிழகத்திற்கு நீர் திறக்க முடியாது என தெரிவித்தனர். நீண்ட நேர விவாதத்துக்குப் பிறகு, மழை மற்றும் நீர்வரத்தை மேலும் ஒரு வாரம் கண்காணித்து, ஜூலை 28 அன்று காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தை நடத்தி, மாநிலங்களின் கருத்துகள் மற்றும் நீரியல்–வானிலை சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு வழங்க வேண்டிய நீரளவை தீர்மானிக்கலாம் என தலைவர் ஹல்தார் கூறினார்.





