ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக்) டி-20 தொடரின் நிறுவனரும் முன்னாள் தலைவருமான லலித் மோடி, 16 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா திரும்ப உள்ளதாக அறிவித்துள்ளார். அன்னிய செலாவணி தொடர்பான வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைத்ததைத் தொடர்ந்து அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
லலித் மோடி (62), 2010-ல் இந்தியாவை விட்டு வெளியேறி, பிரிட்டனின் லண்டனில் தங்கியிருந்தார். ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி வெளிநாட்டிற்கு அன்னிய செலாவணி பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறி, அமலாக்கத் துறை (ED) வழக்குப் பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கு, கடத்தல்காரர்கள் மற்றும் வெளிநாட்டு பண மோசடி செய்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டத்தின் கீழ் இயங்கும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் விசாரிக்கப்பட்டது. சமீபத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில், அமலாக்கத் துறையின் அபராதங்களை தீர்ப்பாயம் ரத்து செய்ததுடன், இந்த விவகாரத்தில் லலித் மோடியின் பொறுப்பை உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் குறிப்பிட்டது.
தீர்ப்பைத் தொடர்ந்து, இது 16 ஆண்டுகளாக நீண்ட தனது சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என லலித் மோடி கூறினார். ஐ.பி.எல். நலனுக்காகவே செயல்பட்டதாகவும், தன் மீது வீண்பழி சுமத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா வர திட்டமிட்டுள்ளதாகவும், நாடு திரும்புவதை எதிர்நோக்கி இருப்பதாகவும் அவர் கூறினார்.





