புதுடில்லியில் நடைபெற்ற போராட்டம் மற்றும் பார்லிமென்ட் நடவடிக்கைகள் தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் நோக்கம் தீர்வு காண்பது அல்ல; குழப்பத்தை உருவாக்குவதே என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார்.
பிரதமர் இல்லம் முன்பு அனுமதியின்றி காங்கிரஸ் நடத்திய போராட்டத்தை குறிப்பிட்டு, அந்த இடத்திற்கு அரசு சார்பில் அமைச்சரை அனுப்பியபோது பார்லிமென்டில் விவாதம் நடத்த வேண்டும் என்பதே அவர்களின் முதல் நிபந்தனையாக இருந்ததாக கூறினார். அதற்கு அரசு சம்மதித்தபோதும், தற்போது அரசு விரிவான விவாதத்திற்கு தயாராக இருக்கும் நிலையில் மேலும் பல நிபந்தனைகளை விதித்து குழப்பம் ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
நீட் தேர்வு விவகாரத்தையும் மாணவர்களையும் பயன்படுத்தி அரசியல் லாபம் தேட காங்கிரஸ் முயல்கிறது என்றும், பார்லிமென்டை தொடர்ந்து முடக்குகிறது என்றும் அவர் கூறினார். விவாதம் நடந்தால் அரசு எடுத்த நடவடிக்கைகள் வெளிப்படும்; அதனால் உண்மை வெளிவந்து விடும் என்பதால் விவாதத்திற்கு வர மறுக்கிறார்கள் எனவும் குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விவாதத்திற்கு வர வேண்டும்; அரசு பதிலளிக்கத் தயாராக உள்ளது என அவர் வலியுறுத்தினார். பதிலளிக்கத் தயாராக இருக்கும் அமைச்சர்களை கூச்சலிட்டு அடக்குவது பயனில்லை என்றும், காங்கிரசுக்கு தீர்வுகள் தேவையில்லை; குழப்பமே நோக்கம் என்றும் அவர் மீண்டும் கூறினார்.





