சென்னை: வழக்குகளின் தேக்கத்தை குறைக்கும் நோக்கில், மாநிலம் முழுதும் உள்ள நீதிமன்றங்களை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு அரசு முன்னுரிமை அளிக்கும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்துடன் தொடர்புடைய மிகப் பழமையான சங்கங்களில் ஒன்றான ‘மெட்ராஸ் பார் அசோசியேஷன்’ சார்பில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் பேசினார். சங்கத் தலைவர் வி.ஆர். கமலநாதன் அமைச்சரை வரவேற்றார்.
சட்டத்துறை மற்றும் நீதிமன்ற நிர்வாகத்தில் சில சிக்கல்கள் உள்ளதாகவும், அவற்றை தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். வழக்கறிஞர்களின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
முதல்வர் விஜய் வழங்கிய அறிவுறுத்தலை குறிப்பிட்டு, நீதிமன்றங்களை எவ்வளவு விரிவுபடுத்த முடியுமோ அவ்வளவு விரிவுபடுத்த வேண்டும் என்றார். 200 வழக்குகளுக்கு ஒரு நீதிமன்றம் என்ற அளவுகோலை அடிப்படையாகக் கொண்டு, விரிவாக்கத்திற்கு முதல் முன்னுரிமை வழங்கப்படும்; இதன் மூலம் வழக்குத் தேக்கம் குறையும் எனவும் அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், சங்கச் செயலர் போத்திராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்ததும், உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறைக்கு சென்ற அமைச்சர், அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.





