நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள் தேசிய தேர்வு முகமை (NTA) மூலம் இன்னும் தமிழக அரசுக்கு கிடைக்காததால், மனநல ஆலோசனை வழங்கும் பணியில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை தெரிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு தேர்வு நடத்தப்பட்ட பின்னர், வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டு, பின்னர் மறுதேர்வு நடத்தப்பட்டது.

தமிழகத்தில் இந்த மறுதேர்வை 1.08 லட்சம் பேர் எழுதினர்; அவர்களில் 61,306 பேர் தேர்ச்சி பெற்றனர். வழக்கமாக குறைந்த மதிப்பெண் பெற்றோர் மற்றும் தேர்ச்சி பெற முடியாத மாணவர்களுக்கு அரசு சார்பில் மனநல ஆலோசனை வழங்கப்படுகிறது. மாணவர்கள் மற்றும் பெற்றோர் 14416, 104 என்ற உதவி எண்களிலும் ஆலோசனை பெறலாம்.

நீட் முடிவுகள் ஜூலை 16 அன்று வெளியான நிலையில், தேர்வர்கள் பற்றிய முழு விவரங்களை NTA இதுவரை மாநில அரசுக்கு வழங்கவில்லை என அதிகாரிகள் கூறினர். தற்போது அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படித்து தேர்வு எழுதிய 12,600 மாணவர்களின் விவரங்கள் மற்றும் கைபேசி எண்கள் மட்டுமே துறையிடம் உள்ளதாகவும், அவர்களை தொடர்புகொண்டதில் சுமார் 5,000 பேர் அழைப்பை ஏற்று பேசியதாகவும் தெரிவித்தனர்.

மீதமுள்ள மாணவர்களின் விவரங்கள் கிடைத்ததும் அனைவரையும் தொடர்புகொண்டு ஆலோசனைகள் வழங்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.