பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது. இதனால், வழக்கு விரைவில் சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், 2024 ஜூலை 5 அன்று சென்னை பெரம்பூரில் அவரது வீடு அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கை தமிழக காவல்துறை விசாரித்து வந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, அரசியல் தலையீடு இருப்பதாகக் கூறி சிபிஐ விசாரணை கோரினார். அந்த மனுவை ஏற்ற உயர் நீதிமன்றம், விசாரணையை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டது.

அந்த உத்தரவை எதிர்த்து அப்போது இருந்த திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வர் விஜய் தலைமையில் த.வெ.க. அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முந்தைய மேல்முறையீட்டை வாபஸ் பெற முடிவு செய்து, சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு இல்லை என தெரிவித்தது.

நீதிபதி கே.வி. விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு, மேல்முறையீட்டை முறைப்படி வாபஸ் பெற அனுமதி அளித்தது. மேலும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் ஜாமினை ரத்து செய்யக் கோரிய மனுவில் சிபிஐ பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை செப்டம்பர் 2-க்கு ஒத்திவைத்தது.