காசோலை திரும்பிய (செக் பவுன்ஸ்) வழக்கில் நடிகர்-தயாரிப்பாளர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
புகாரின் படி, சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான மன்னர் வகையறா படத்தை தயாரிப்பதற்காக கோபி என்பவரிடமிருந்து விமல் ரூ.4.5 கோடி கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. அந்த தொகையை திருப்பிச் செலுத்தும் வகையில் விமல் காசோலை வழங்கியுள்ளார்.
ஆனால் வங்கியில் போதிய இருப்பு இல்லாததால் அந்த காசோலை திரும்பி வந்ததாகவும், அதன் பின்னரும் கடன் தொகை செலுத்தப்படவில்லை என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கோபி காசோலை மோசடி வழக்கை தொடர்ந்தார்.
விசாரணை காலத்தில் விமல் ஏற்கெனவே நீதிமன்றத்தில் ஆஜராகி விசாரிக்கப்பட்டிருந்தார். தீர்ப்பளித்த நீதிபதி ஆர்த்தி, விமலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி ஓராண்டு சிறை தண்டனை விதித்தார். மேல்முறையீடு செய்ய வசதியாக கால அவகாசமும் வழங்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.





