2047க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறி, உலகிற்கு “மிகப்பெரிய வழிகாட்டியாக” இருக்கும் என்று துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மருத்துவத் துறையிலும் குறிப்பிடத்தக்க வெற்றிகள் மற்றும் சாதனைகள் உருவாகும் என அவர் கூறினார்.

கோவையில் குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் அமைந்துள்ள ஜி.கே.என்.எம். செவிலியர் கல்லூரியின் புதிய வளாகத்தை திறந்து வைத்து அவர் உரையாற்றினார். தேசிய அளவில் செவிலியர் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவது, மக்களிடையே ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு உயர்ந்திருப்பதைக் காட்டுகிறது என்றார்.

மேலும், உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு தற்போது பெரிதும் வளர்ந்துள்ளதாகவும், தானமாக வழங்கப்படும் உறுப்புகள் பிறருக்கு பயன்படும் போது அவர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். கண் மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பயிற்சி அளித்தல், உள்கட்டமைப்பை மேம்படுத்தல், மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் போன்ற பணிகளுக்காக மத்திய அரசு நிதியுதவி வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

விழாவில் அறக்கட்டளை தலைவர் கோபிநாத் வரவேற்றார். கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர், அறக்கட்டளை துணைத் தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு, ஜி.கே.என்.எம். மருத்துவமனை முதன்மை செயல் அதிகாரி ரகுபதி வேலுசாமி உள்ளிட்டோர் உரையாற்றினர். டாக்டர்கள், பேராசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.