தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு சார்பில், அடுத்த “மெகா திட்டமாக” தென் கடலோர மாவட்டங்களில் மாபெரும் கடற்கரை தூய்மை இயக்கம் தொடங்கப்பட உள்ளது.
ஜூலை மாதம் முழுவதும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என அமைப்பு அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் மாரத்தான், நடைபயிற்சி, ஸ்கேட்டிங் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாகவும், போதைப்பொருளுக்கு எதிராக ஜூலை 12ல் பொள்ளாச்சியில் அண்ணாமலை முதல் மாநாட்டை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அடுத்த கட்டமாக கடற்கரை தூய்மை பணித் திட்டத்தை அண்ணாமலை முன்னெடுக்கிறார். இதன் தொடக்க நிகழ்ச்சி ஆகஸ்ட் 2 அன்று கன்னியாகுமரி கடற்கரைச் சாலையில் நடைபெறும் என அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் திருநெல்வேலி மாவட்டம் உவரி, தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு மற்றும் திருச்செந்தூர் ஆகிய இடங்களிலும் இதேபோன்ற தூய்மை பணிகளை தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பினர் கூறினர். தொடக்க நிகழ்ச்சிக்குப் பிறகு பயணத்தின் போது உள்ளூர் மீனவர்களுடன் அண்ணாமலை கலந்துரையாடவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாசுபாட்டைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் நடவடிக்கைகள், கன்னியாகுமரி மற்றும் திருச்செந்தூரில் உள்ள முக்கிய சுற்றுலா மற்றும் பாரம்பரிய மையங்களை பராமரித்தல் ஆகியவை இந்த முயற்சியின் முக்கிய நோக்கங்களாக பார்க்கப்படுகிறது. மேலும், ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பில் அதிக அளவில் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ள மாவட்டமாக கன்னியாகுமரி இருப்பதாக வட்டாரங்கள் கூறுகின்றன.





