புதுடில்லி: பொதுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்க சட்டத்தை மேலும் வலுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தண்டனை விதிகளை கடுமைப்படுத்தும் திருத்தங்களை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. புதிய திருத்தங்களின்படி, குற்றம் இழைப்பவர்களுக்கு அதிகபட்சம் 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

மேலும், ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் இத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டு சிக்கினால், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ.10 கோடி அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்தில் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போதுள்ள சட்டத்தில், இவ்வகை குற்றங்களில் சிக்கும் தனிநபர்களுக்கு 3 முதல் 5 ஆண்டு சிறை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம் என்ற விதிகள் உள்ளன. இதுபோன்ற குற்றங்களை முறையாக அரசிடம் தெரிவிக்காத அமைப்புகளுக்கு ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்களை கொண்டு வர பொதுத் தேர்வுகள் முறைகேடு தடுப்பு சட்டம், 2024-இல் திருத்தங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருத்த மசோதா வரும் திங்கட்கிழமை பார்லிமென்டில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.