புதுடில்லி: ‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து தலைநகரில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், தேசிய பாதுகாப்பு சட்டம் (NSA) கீழ் டில்லி போலீஸ் கமிஷனருக்கு வழங்கப்படும் தடுப்பு காவல் அதிகாரத்தை மத்திய அரசு மீண்டும் புதுப்பித்துள்ளது.
உத்தரவில், NSA பிரிவு 3ன் கீழ் வழங்கப்படும் இந்த அதிகாரப் புதுப்பித்தல் ஜூலை 19 முதல் அக்.18 வரை மூன்று மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு, பொது ஒழுங்கு அல்லது அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகள் பராமரிப்புக்கு எதிராக செயல்படுவதாக கருதப்படும் நபர்களுக்கு எதிராக தடுப்பு காவல் உத்தரவு பிறப்பிக்க இது வழிவகுக்கிறது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி” டில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாணவர் அமைப்புகள் உள்ளிட்ட பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஜூலை 20 அன்று பார்லிமென்டை முற்றுகையிட முயன்றபோது போலீசார் தடுத்ததால் மோதல் ஏற்பட்டதாகவும், தடியடி மற்றும் கண்ணீர் புகை வீச்சு நடந்ததாகவும் செய்தி தெரிவிக்கிறது.
இந்த மோதலில் போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் உட்பட சுமார் 180 பேர் காயமடைந்ததாகவும், பலர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து டில்லியில் பதற்றம் நீடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தடுப்பு காவல் அதிகாரப் புதுப்பித்தல் தற்போதைய போராட்டங்களை குறிவைத்து வழங்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் தவறானவை என டில்லி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை இது வழக்கமான நிர்வாக நடைமுறையாக புதுப்பிக்கப்படும் என்றும், தற்போதைய உத்தரவு ஜூலை 7-தேதியே பிறப்பிக்கப்பட்டதாகவும், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.





