தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு (சிமி) தொடர்புடையவர்கள் தமிழகத்தில் மீண்டும் செயல்பட முயல்வதாகவும், பல்வேறு அரசியல் கட்சிகளின் மாணவர் அணிகளில் ஊடுருவியிருக்கலாம் என்றும் கூறப்படும் தகவல்களை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்து வருகிறது.

1977ல் தொடங்கப்பட்ட சிமி அமைப்பு, பல்வேறு நாசகார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து 2001 முதல் மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், வேறு பெயர்களில் செயல்பட்டு இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டை பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக என்ஐஏ விசாரணையில் தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அண்மையில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் மர்ம நபர்கள் குறித்து ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், பீஹார், மேற்கு வங்கம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் விசாரணை நடத்தப்பட்டதாகவும், அதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.

அந்த ஆவணங்களின் அடிப்படையில், தமிழகத்தையும் சேர்த்து பல மாநிலங்களில் சில அரசியல் கட்சிகளின் மாணவர் அமைப்புகளில் சிமி தொடர்புடையவர்கள் ஊடுருவியிருப்பதற்கான சுட்டுக்காட்டுகள் இருப்பதாக என்ஐஏ தெரிவித்தது. மேலும், “ஜிஹாத்” என்ற பெயரில் தீவிரவாத நடவடிக்கைகளை ஊக்குவித்து, இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்தும் திட்டங்களை முன்னெடுக்க முயல்வதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

தமிழகத்தில் மதுரை, திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் முகாமிட்டு சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.