‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடுவதைத் தடுக்கவோ அல்லது பாடலை அவமதிக்கவோ செய்தால் அதை குற்றமாகக் கருதி சிறை தண்டனை விதிக்க வழிவகுக்கும் தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு சட்டத் திருத்த மசோதா ராஜ்யசபாவில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

பங்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றிய ‘வந்தே மாதரம்’ பாடல் உருவாகி 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, அரசு நிகழ்ச்சிகளில் அந்தப் பாடலை முழுமையாகப் பாட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவுறுத்தலின்படி, அரசு நிகழ்ச்சிகள் தொடக்கத்திலும் முடிவிலும் தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ மற்றும் தேசிய கீதமான ‘ஜன கண மன’ ஆகியவற்றை பாட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த பின்னணியில், ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு இடையூறு விளைவித்தல் அல்லது அவமரியாதை செய்தல் ஆகியவற்றுக்கு சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவை மத்திய இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் அவையில் தாக்கல் செய்தார். தேசியக் கொடி, தேசிய கீதம் போன்ற முக்கிய தேசியச் சின்னங்களுக்கு இணையான அந்தஸ்தை ‘வந்தே மாதரம்’ பாடலுக்கும் வழங்குவதே இதன் நோக்கம் என கூறப்பட்டுள்ளது.

மசோதாவுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் ஜான் பிரிட்டாஸ் (மார்க்சிஸ்ட்) மற்றும் சந்தோஷ் குமார் (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.