புதுடில்லி: கரப்பான்பூச்சி ஜனதா இயக்கத்துடன் தொடர்புடைய போராட்டங்களின் பின்னணியில் இந்தியாவிற்குள்ளும் வெளிநாட்டிலும் உள்ள சக்திகள் செயல்படுகின்றன என்று ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

ஒரு பேட்டியில், நீட் தேர்வு தொடர்பான பிரச்னையை தொடக்கத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பினதாகவும், பின்னர் அது திசைமாறி அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

போராட்டத்தில் பங்கேற்கும் இளைஞர்களை நோக்கி, இந்தியா வலிமையானதும் கல்வி வளம் நிறைந்ததுமான நாடாக உருவாகுவதை சில நாடுகள் விரும்பவில்லை; நாட்டை பலவீனப்படுத்த முயல்கின்றன என்று அவர் தெரிவித்தார்.

மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான பங்களிப்பை அளிக்க வேண்டும் எனவும், ஆயிரக்கணக்கான புத்தொழில் நிறுவனங்கள் மூலம் இந்தியா உலகிற்கு முன்மாதிரியாக திகழ்கிறது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இளைய தலைமுறையினர் நன்மை செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை; ஆனால் எதையும் சீர்குலைக்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.