நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில், மத்திய அரசு விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வு, கசிவுகளைத் தடுப்பதற்காக தற்காலிக நடவடிக்கைகளில் மட்டும் நம்பிக்கை வைக்காமல், நிரந்தர தீர்வை நோக்கி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமாக தெரிவிக்க வேண்டும் என்று கூறியது.

மேலும், தேர்வுக்கு முன், தேர்வின் போது மற்றும் தேர்வு முடிந்த பின் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் குறித்து விரிவான அறிக்கையையும் கோரியது. இதில் தேர்வு நடைமுறை, தேர்வு மையங்கள், வினாத்தாள் அச்சிடுதல், வினாத்தாள்களை மையங்களுக்கு கொண்டு செல்லும் போக்குவரத்து ஏற்பாடுகள் உள்ளிட்டவை இடம்பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

அத்துடன், நீட் தேர்வை ஆன்லைன் முறையில் நடத்துவது குறித்த பரிந்துரைகள் மற்றும் அதற்கான தரவு பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசிடம் கேட்டது. வினாத்தாள் கசிவுக்குப் பிறகு வினாத்தாள்களை விமானப் படை மூலம் கொண்டு சென்றது தற்காலிக நடவடிக்கையே எனக் குறிப்பிட்ட அமர்வு, விண்ணப்பதாரர் சரிபார்ப்புக்கு ‘டிஜியாத்ரா’ போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் முன்மொழிவுகள் குறித்தும் விவரம் கேட்டது.

இதையடுத்து, விரைவில் புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா தெரிவித்தார். வழக்கு விசாரணை ஜூலை 27க்கு ஒத்திவைக்கப்பட்டது.