தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொடர்பான தகராறுகளை அரசு அதிகாரிகளே தீர்த்து வைக்கும் நடைமுறைக்கு உச்ச நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது. நிலம் கையகப்படுத்தும் விவகாரங்களில் இழப்பீட்டு தொகையை நிர்ணயிப்பது அடிப்படையில் நீதித்துறை சார்ந்த பணியாகும்; அதற்கென நடுவர்/தீர்ப்பாய அமைப்புகள் உள்ளன என்றும் அமர்வு குறிப்பிட்டது.
ஆனால் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கான கையகப்படுத்தலில் மட்டும், தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத்தின் கீழ் அதிகாரம் முழுமையாக அரசு அதிகாரிகள் வசம் செல்லும் நிலை உருவாகிறது; இதை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் நெடுஞ்சாலைகளை ஒட்டிய நிலங்கள் அதிக மதிப்புடையவை என்றும், இத்தகைய வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தலையிட்ட பிறகே விவசாயிகளுக்கு இழப்பீட்டு வட்டி வழங்கப்பட்ட சம்பவங்களையும் அமர்வு சுட்டிக்காட்டியது.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, இழப்பீடு தொடர்பான வழக்குகளை நீதித்துறை பயிற்சி பெற்ற அமைப்புகள் விசாரிக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தெரிவித்தார்.
இந்த விளக்கத்தை பதிவு செய்த நீதிபதிகள், மத்திய அரசே சட்டத் திருத்தத்தை பரிசீலித்து வருவதால் உடனடியாக தலையிட விரும்பவில்லை என கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.





