சென்னை: தமிழகத்தில் அணைகள் மற்றும் பாசன ஏரிகளில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருவதால், 10 ஆண்டுகளுக்குப் பின் கடுமையான வறட்சி நிலை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்மேற்கு பருவமழை தமிழகத்திலும் அண்டை மாநிலங்களிலும் குறைந்ததே இதற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
நீர்வளத் துறை பராமரிப்பில் மாநிலத்தில் 90 அணைகள் மற்றும் 14,141 பாசன ஏரிகள் உள்ளன. 90 அணைகளின் மொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி. என்ற நிலையில், தற்போது 71.2 டி.எம்.சி. மட்டுமே இருப்பதாகவும், இது மொத்த கொள்ளளவின் சுமார் 31.7% எனவும் அதிகாரிகள் கூறினர்.
பல அணைகளில் தூர் வாராததால் கொள்ளளவு பாதிக்கப்பட்டு, சேறு மற்றும் சகதியுடன் குறைந்த அளவு நீரே பயன்பாட்டுக்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. பாசன ஏரிகளில் 3,483 ஏரிகள் ஏற்கனவே வறண்டு விட்டதாகவும், மேலும் 6,127 ஏரிகள் வறண்டு விடும் நிலைக்கு நெருங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
2016–17 ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரிய வறட்சி ஏற்பட்டதையும், பல மாவட்டங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதையும் நினைவூட்டிய அதிகாரிகள், தற்போது அதே நிலையை நோக்கி மாநிலம் நகர்கிறது என்றனர். ‘எல் நினோ’ தொடர்பான காலநிலை மாற்றத்தால் அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், ராமநாதபுரம், திருச்சி, திருப்பத்தூர், வேலூர், விருதுநகர் மாவட்டங்களில் கடுமையான வறட்சி ஏற்படலாம் என மத்திய அரசு எச்சரித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேய்ச்சல் நிலங்கள் காய்ந்து கிடப்பதால் கால்நடைகளுக்கான தீவன பற்றாக்குறையும் உருவாகி வருவதாக அதிகாரிகள் கூறினர்; மழை மேலும் குறைந்தால் பாதிப்பு அதிகரிக்கலாம் எனவும் எச்சரித்தனர்.





