தமிழகத்தில் பல்வேறு ரயில் திட்டங்கள் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தால் பின்னடைவை சந்தித்து வருவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேவையான நில அளவுடன் ஒப்பிடும்போது இதுவரை வழங்கப்பட்ட நிலம் குறைவாக இருப்பதே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் நிலவரப்படி, மாநிலத்தில் எட்டு புதிய பாதைகள், மூன்று அகல பாதை மாற்றத் திட்டங்கள் மற்றும் எட்டு இரட்டை பாதை திட்டங்களை செயல்படுத்த ₹27,282 கோடி மதிப்பிலான பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், நிலம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் பணிகள் வேகம் பெறவில்லை.

ரயில்வே தரப்பின் தகவலின்படி, தமிழக ரயில் திட்டங்களுக்கு மொத்தமாக 11,391 ஏக்கர் நிலம் தேவை. மாநில அரசு இதுவரை 2,910 ஏக்கர் மட்டுமே ஒதுக்கியுள்ளதால் திட்டப் பணிகள் தாமதமாகின்றன.

தெற்கு ரயில்வே பயனாளர் குழு உறுப்பினர் ஜாபர் அலி கூறுகையில், மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில் திட்டங்களுக்கு ஆண்டுதோறும் கணிசமான நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், நடப்பு நிதியாண்டில் ₹7,611 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இருப்பினும், தேவையான நிலத்தில் தற்போது வரை சுமார் 26% மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளதால் நிலம் கையகப்படுத்துதலே முக்கிய தடையாக உள்ளதாக அவர் கூறினார்.