மும்பை: நீட் தேர்வு விவகாரத்தில் டில்லியில் போராட்டம் நீடிக்கும் சூழலில், கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவும், நேர்மை ஊக்குவிக்கப்படவும், தகுதிக்கு வெற்றி கிடைக்கவும் செய்யும் கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வலியுறுத்தினார்.
வெளியிட்ட அறிக்கையில், தனது தந்தை பேராசிரியராக இருந்து பல இளம் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்ததை நினைவுகூர்ந்தார். “தோல்வி அடைவதில் தவறு இல்லை; ஆனால் ஏமாற்றுவது தவறு. குறுக்கு வழியை ஒருபோதும் தேர்வு செய்யாதே” என்று தந்தை கற்றுக் கொடுத்ததாக அவர் தெரிவித்தார்.
சமூகத்தில் முதிர்ந்த குடிமக்களாக கலாசாரத்தை வடிவமைக்கும் பொறுப்பு நமக்கே உள்ளது என்றும், உழைப்பை விட முடிவுகளுக்கே முன்னுரிமை தரும் சமூகம் தகுதியின் அடிப்படையில் முன்னேறாமல் குறுக்கு வழியை நாடும் என்றும் அவர் கூறினார். கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்காத போது மாணவர்கள் ஏமாற்றம் அடைவது இயல்பானது; அதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பள்ளிகள் மற்றும் நிர்வாகத்தினர் உள்ளிட்ட அனைவரும் இளைஞர்கள் தொடர்ந்து ஊக்கத்துடனும் ஆற்றலுடனும் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு கொண்டுள்ளதாக அவர் கூறினார். குழந்தைகளின் எதிர்காலத்தை வலுப்படுத்தி அவர்களின் லட்சியங்களைப் பாதுகாக்கும் தீர்வுகளை அனைவரும் சேர்ந்து கண்டறிவோம் என்ற நம்பிக்கையையும் டெண்டுல்கர் வெளிப்படுத்தினார்.





