புதுடில்லி: மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் விலகியதைத் தொடர்ந்து, அவருக்கு பாஜ தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்று கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், மதிப்பெண் குளறுபடிகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை கண்டித்து, தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி டில்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி இயக்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனுடன் இணைந்து மத்திய அரசு தரப்பில் பேச்சுவார்த்தையும் நடைபெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த போராட்டம் மற்றும் பேச்சுவார்த்தை சூழலுக்கிடையே, தர்மேந்திர பிரதான் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரதமர் நரேந்திர மோடிக்கு இரண்டு பக்கங்கள் கொண்ட ராஜினாமா கடிதத்தையும் அவர் அனுப்பியுள்ளார்.

இதையடுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நிதின் நபின், நாட்டின் கல்வியை சீரமைப்பதிலும், வரலாற்று முக்கியத்துவம் கொண்ட தேசிய கல்விக் கொள்கையை வெற்றிகரமாக செயல்படுத்துவதிலும் தர்மேந்திர பிரதான் முக்கிய பங்கு வகித்ததாக குறிப்பிட்டார். பல்வேறு நலன்களை முன்னிறுத்தி அவர் எடுத்த விலகல் முடிவு பொது வாழ்வில் நேர்மை மற்றும் தன்னலமற்ற சேவையை வெளிப்படுத்துகிறது என்றும், அவரின் முடிவுக்கு கட்சி எப்போதும் உறுதுணையாக நிற்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும், தர்மேந்திர பிரதானின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்.