சென்னையில் வங்கி மேனேஜரை கன்னத்தில் அறைந்ததாக, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகாரின் விவரப்படி, சென்னை அடையாறில் கயல்விழிக்கு சொந்தமான கட்டடத்தில் எஸ்பிஐ வங்கி செயல்பட்டு வருகிறது. அந்த கட்டடத்தில் உள்ள லிப்ட் பழுதடைந்ததால், பிரச்னையை சரிசெய்ய கயல்விழியின் உதவியாளரை எஸ்பிஐ என்ஆர்ஐ கிளை மேனேஜர் ஹர்ஷீன் சிங் தொடர்புகொள்ள முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால், அவரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை.

இதையடுத்து, ஹர்ஷீன் சிங் நேரடியாக கயல்விழியை தொடர்பு கொண்டு லிப்ட் பிரச்னையை தெரிவித்ததாகவும், அதன் பின்னர் கயல்விழி வங்கி கிளைக்கு வந்து, தன்னை போன் செய்தது குறித்து மேனேஜரிடம் கடுமையாக கேள்வி எழுப்பியதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த நேரத்தில் மேனேஜர் இரு கைகளையும் கன்னத்தில் வைத்தபடி அமர்ந்திருந்த நிலையில், கயல்விழி அவரை கன்னத்தில் ஓங்கி அறைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேனேஜரை தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி, எஸ்பிஐ ஆர்.பி.ஓ முதன்மை மேனேஜர் நமச்சிவாயம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.