குழந்தைகளுக்கான பாக்கெட் உணவுகளில் சர்க்கரை அளவை முன்பக்கத்தில் தெளிவாகக் காட்டும் ஊட்டச்சத்து குறியீட்டு விதிகளை விரைவில் அமல்படுத்த வேண்டும் என, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.-க்கு நுகர்வோர் விவகாரங்களுக்கான பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.
குழந்தைகளுக்கான பல பாக்கெட் உணவுகளில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதாக டாக்டர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றனர். ஆனால், எவ்வளவு சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது என்பதை நுகர்வோர் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தற்போது எளிமையான முன்பக்க தகவல் முறை இல்லை என குழு குறிப்பிட்டுள்ளது.
தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையிலான இந்த குழு, அனுமதிக்கப்பட்ட வரம்பை நிர்ணயிப்பதோடு மட்டும் நிற்காமல், நுகர்வோருக்கு தெளிவான தகவல் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியது. உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரைகளின் அடிப்படையில் சர்க்கரை அளவை கட்டாயமாக வகைப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.
முக்கிய பரிந்துரைகளாக, அனைத்து பாக்கெட் உணவுகளிலும் மொத்த சர்க்கரை மற்றும் சேர்க்கப்பட்ட சர்க்கரை அளவை தனித்தனியாக குறிப்பிடுவதை கட்டாயமாக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும் குழந்தைகளுக்கான உணவுகளில், ஒரு முறை பரிமாறும் அளவில் (சர்விங் சைஸ்) சேர்க்கப்பட்ட சர்க்கரை எத்தனை கிராம் என்பதையும், அது அந்த வயதினரின் தினசரி ஆற்றல் தேவையில் எவ்வளவு சதவீதம் என்பதையும் தெளிவாகக் காட்ட வேண்டும் என கூறியுள்ளது.
அதேபோல், உணவு பாக்கெட்டின் முன்பக்கத்தில் சிவப்பு–மஞ்சள்–பச்சை நிறக் குறியீடுகள் அல்லது அதிக சர்க்கரை உள்ள பொருட்களுக்கு எச்சரிக்கை குறியீடு போன்ற எளிய காட்சி முறைகள் மூலம் தகவலை வெளிப்படுத்த வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. 2022-ல் வெளியிடப்பட்ட முன்பக்க ஊட்டச்சத்து குறியீட்டு வரைவு விதிகள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இறுதி செய்யப்படாததை சுட்டிக்காட்டி, மேலும் தாமதம் இன்றி அவற்றை விரைவில் அமல்படுத்த வேண்டும் என குழு கேட்டுக்கொண்டுள்ளது.





