கோவை கோனியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை பணம் திருடப்பட்டதாக எழுந்த புகாரில், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ் குமார் விசாரணை நடத்தி, 4 கோவில் ஊழியர்கள் தொடர்புடையதாக உறுதி செய்துள்ளார். இதையடுத்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவில் வளாகத்தில் மொத்தம் 16 உண்டியல்கள் உள்ளன. இதில் 9 நிரந்தர உண்டியல்கள், திருப்பணிக்கான நன்கொடை வசூலிக்க 1 உண்டியல் மற்றும் தேர்த்திருவிழாவை ஒட்டி 6 தற்காலிக உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை ஜூலை 15 அன்று காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் எண்ணியதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த நேரத்தில் ஒரு உண்டியலை தனியாக எடுக்காமல், ஏற்கனவே எண்ணப்பட்ட உண்டியல்களுடன் சேர்த்து மறைத்து வைத்ததாக கூறப்படுகிறது. இதை அதிகாரிகள் உடனடியாக கவனிக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்காலிக உண்டியல்களை டிராலியில் எடுத்துச் சென்றபோது, கலையரங்கத்துக்கு பின்னால் ஒரு ஊழியர் உண்டியலில் இருந்த பணத்தை எடுத்து பையில் வைத்ததை ஒரு பக்தர் பார்த்ததாக கூறப்படுகிறது. அவர் சென்னையில் உள்ள அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, கோவில் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது.

அதில் சீட்டு விற்பனையாளர் பாலசுப்ரமணியன், அலுவலக உதவியாளர் சரவணன், திருவலகு பணியாளர் பிரதீப்குமார் மற்றும் பூசாரி கிருஷ்ணராஜ் ஆகியோர் கூட்டு சேர்ந்து ஒரு உண்டியலை மறைத்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் ரூ.31,000 பணத்தை பாலசுப்ரமணியன் வீட்டுக்கு எடுத்துச் சென்று, மறுநாள் 4 பேரும் பகிர்ந்து கொண்டதாக அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, கோவில் செயல் அலுவலர் குமார் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்; எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட பின் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.