புதுடில்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் மாணவர் போராட்டம் குறித்து தவறான தகவல்கள் பரப்பியதாக 400க்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்குகளை டில்லி போலீசார் கண்டறிந்து முடக்கியுள்ளனர்.
இந்த போராட்டம், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நடைபெற்று வருகிறது. போராட்டத்தைச் சுற்றி சமூக ஊடகங்களில் தினசரி பல்வேறு செய்திகள் மற்றும் பதிவுகள் பரவி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
டில்லி மத்திய மாவட்ட காவல்துறை துணை கமிஷனர் ரோஹித் ராஜ்பீர் சிங் கூறுகையில், போலி உள்ளடக்கங்களை பரப்பிய பல கணக்குகள் பாகிஸ்தானில் இருந்து இயக்கப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இத்தகைய கணக்குகளை அடையாளம் காண சம்பந்தப்பட்ட முகமைகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறினார்.
மேலும், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலி உள்ளடக்கங்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட புகைப்படங்கள் உள்ளிட்டவை பரப்பப்பட்டதாகவும், எந்த தகவலையும் பகிரும் முன் அதன் உண்மைத் தன்மையை சரிபார்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.





