சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், ஒழுங்கு நடவடிக்கையால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் தி.மு.க.வில் இணைக்க கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, முன்னாள் கவர்னர் ரவி மற்றும் நடிகைகள் குஷ்பு, நயன்தாரா, திரிஷா குறித்து கொச்சையாகவும் அவதூறாகவும் பேசியதாக கூறப்பட்ட சில பேச்சாளர்கள்மீது தி.மு.க. தலைமையகம் நடவடிக்கை எடுத்து கட்சியிலிருந்து நீக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி, மாநகராட்சி/நகராட்சி/ஒன்றிய/ஊராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் மாநகர, பகுதி, நகர, ஒன்றிய, வட்ட அளவிலான நிர்வாகிகள்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல். சென்னை மேற்கு மாவட்டத்தில் நிலவும் கோஷ்டி பூசல் காரணமாக, ஆயிரம் விளக்கு தொகுதியை சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் பெண் கவுன்சிலர்கள் நீக்கப்பட்டதாகவும், நீக்கப்பட்டவர்களில் சிலர் பின்னர் த.வெ.க.வுக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான சுமார் 150 பேர் மீண்டும் கட்சியில் சேர்க்குமாறு மன்னிப்பு கடிதம் அளித்து காத்திருப்பதாகவும், கடந்த மூன்று மாதங்களாக அவர்கள் த.வெ.க.வுக்கு செல்லாமல் தி.மு.க.வுக்கு விசுவாசமாக இருந்ததாகவும் தகவல் தெரிவிக்கிறது.
இதனை கருத்தில் கொண்டு மூத்த நிர்வாகிகள் பரிந்துரைத்ததைத் தொடர்ந்து, மன்னிப்பு கடிதம் பெற்ற பின் அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க ஸ்டாலின் பச்சைக்கொடி காட்டியதாகவும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.




