‘நீட்’ வினாத்தாள் கசிவு குறித்த விவகாரம் நாடு முழுவதும் போராட்டங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேசிய அளவிலான அரசு போட்டித் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை கட்டுப்படுத்த சட்டத்தை மேலும் கடுமையாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பொதுத் தேர்வுகள் முறைகேடுகள் தடுப்பு சட்டம் – 2024 இல் திருத்தங்கள் செய்யப்பட உள்ளன.

அந்தத் திருத்தங்களின் படி, வினாத்தாள்களை கசிய விடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும் வகையில் மாற்றங்கள் கொண்டுவரப்படலாம் என கூறப்படுகிறது. இந்த மசோதா நாளை மறுநாள் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு, அன்றே நிறைவேற்றப்படலாம் என்ற தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க பிரத்யேக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும், கடும் தண்டனை வழங்க சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்றும் உறுதி அளித்திருந்தார். டில்லியில் பிரதமர் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இந்த திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024-ல் ‘நீட்’, ‘நெட்’ தொடர்பான வினாத்தாள் கசிவுகளுக்குப் பிறகு அமலுக்கு வந்த இந்தச் சட்டம், யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., என்.டி.ஏ., ரயில்வே மற்றும் வங்கி தேர்வுகள் உள்ளிட்டவற்றில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுப்பதற்காக கொண்டு வரப்பட்டது. இதில் குற்றங்கள் ஜாமினில் வெளிவராத குற்றங்களாக கருதப்படுவதுடன், 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் குறைந்தபட்சம் ரூ.1 கோடி அபராதம் விதிக்க வழிவகை உள்ளது.

புதிய மாற்றங்களின் கீழ், மாநிலங்கள் முழுவதும் சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைத்து, வழக்குகளை மூன்று மாதங்களுக்குள் முடித்து தீர்ப்பு வழங்கும் திட்டமும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், முக்கிய குற்றவாளிகளுக்கு ஏற்கனவே உள்ள சட்டங்களின் கீழ் கூடுதல் மற்றும் கடுமையான சிறைத் தண்டனைகள் வழங்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தெரிவிக்கிறது.