அரசு நிலங்களில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற அனுமதி கோரும் தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கு 24 மணி நேரத்துக்குள் அனுமதி வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சீமை கருவேல மரங்களை அகற்றும் உத்தரவை அமல்படுத்தக் கோரி ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பான விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வைகோ நேரில் ஆஜராகி, விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் இணைந்து தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் கருவேல மரங்களை அகற்றியதாகவும், மரங்களில் இருந்து வெளியேறும் கரியமில வாயுவால் தனது நுரையீரல் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் சில பகுதிகளில் வருவாய் துறை அதிகாரிகள் அகற்றும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறினார். இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கவும், அனுமதி வழங்கும் நடைமுறையை காலக்கெடுவுடன் அமல்படுத்தவும் கோரினார்.
அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.சரவணன் ஆஜராகி, புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு நிலங்களில் இருந்த கருவேல மரங்கள் சுமார் 90% அகற்றப்பட்டுள்ளதாகவும், வட மாவட்டங்களில் சுணக்கம் இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, பிரச்னையை ஆய்வு செய்ய நீதிமன்றம் நியமித்த நீதிபதிகளுடன் அரசு துறை செயலர்கள் எந்த கூட்டத்தையும் நடத்தாததை நீதிபதிகள் சுட்டிக்காட்டி அதிருப்தி தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, உத்தரவை செயல்படுத்த வருவாய் துறை செயலரை ‘நோடல்’ அதிகாரியாக நியமித்து, அவர் ஜூலை 31 அன்று நேரில் ஆஜராகி தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என நீதிமன்றம் கூறியது. மேலும், அகற்றும் பணிகளுக்குத் தேவையான நிதியை அரசு ஒதுக்க வேண்டும் என்றும், அரசு நிலங்களில் கருவேல மரங்களை அகற்ற அனுமதி கோரும் அமைப்புகளுக்கு 24 மணி நேரத்துக்குள் அனுமதி வழங்க வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. வைகோவைப் பின்பற்றி தன்னார்வலர்கள் களமிறங்கி பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.





