ஓசூர்: வணிக வரித்துறையில் பணியாற்றும் மாநில வரி அலுவலர் ஒருவர், ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில் ஓசூரில் கைது செய்யப்பட்டார்.

மூக்கண்டப்பள்ளி எம்.எம். நகரைச் சேர்ந்த தொழிலதிபர் நம்பி (75), ஜூஜூவாடி துர்கா நகரில் தொழிற்சாலை நடத்தி வருகிறார். தனது நிறுவனத்திற்கு வர வேண்டிய ரூ.10 லட்சம் ஜி.எஸ்.டி. திருப்பிச் செலுத்தும் தொகையைப் பெற அவர் விண்ணப்பித்திருந்தார்.

இந்த விண்ணப்பத்தை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க, சீத்தாராம் சாலையில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் கலையரசன் (48) மொத்த தொகையில் 20% லஞ்சமாக கேட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு நம்பி முடியாது என கூறியபின், லஞ்சத் தொகை 10% ஆகக் குறைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

லஞ்சம் கொடுக்க விரும்பாத நம்பி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் ரசாயனம் தடவிய ரூ.1 லட்சத்தை வழங்கி வலைவீசினர். அலுவலகத்தில் பணம் கொடுக்கப்பட்டபோது, மறைந்திருந்த போலீசார் கலையரசனை கையும் களவுமாக கைது செய்தனர்.

கலையரசனின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் சூரமங்கலம் என போலீசார் தெரிவித்தனர். நேற்று இரவு அவரது வீட்டிலும் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.