மதுரை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியையின் ஓய்வூதியப் பலன்களை வழங்குவதற்காக லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரில், அரசபட்டி அரசு தொடக்கப்பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியர் வாசுதேவன் பணியிடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார்.
கள்ளிக்குடி அரசு நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்ற சீனித்தாய், தனது ஓய்வூதியப் பலன்களை பெற ரூ.40 ஆயிரம் லஞ்சம் கொடுத்ததாக முதல்வர் தனிப் பிரிவில் புகார் அளித்தார். இந்த தொகை கள்ளிக்குடி வட்டாரக் கல்வி அலுவலர் (பி.இ.ஓ.,) முத்துக்குமாருக்கு நேரடியாகவும், வாசுதேவன் மூலமாகவும் வழங்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், லண்டனில் பொறியாளராக பணியாற்றும் அவரது மகன் சதீஷ், இதே விவகாரத்தில் முதல்வர் தனிப் பிரிவுக்கு ஆன்லைனில் புகார் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் ஊடகங்களில் செய்தியாகவும் வெளியானது.
இதன் தொடர்ச்சியாக தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் விசாரணைக்கு உத்தரவிட்டார். திருமங்கலம் தொடக்கக் கல்வி அலுவலர் ரகுபதி விசாரணை நடத்தினார். அதன் பின்னர் வாசுதேவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பி.இ.ஓ., முத்துக்குமார் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை கல்வி ஒன்றியத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.





