பழநி நில விவகாரம்: குற்றச்சாட்டுகளை அமைச்சர் மறுப்பு

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், பழநி நில விவகாரத்தில் தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கத்துடன் உருவாக்கப்படுகின்றன என்று கூறினார். தன் பெயரையும் அரசின் பெயரையும் கெடுக்க முயற்சி நடக்கிறது எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

அந்த நிலம் ரூ.100 கோடி மதிப்புள்ளதாக கூறப்படுவது, வழக்கு வந்த பிறகே தமக்கு தெரிய வந்ததாக அமைச்சர் தெரிவித்தார். வேறு விஷயங்கள் கிடைக்காததால் இதை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

நில பத்திரப் பதிவு ஜூலை 7-ஆம் தேதி நடந்ததாகவும், அதற்கு முன்பே ஜூன் 30-ஆம் தேதி அரசு நீதிமன்றத்தில் அந்த நிலம் தொடர்பாக முறையீடு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார். விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று தாமே முதல்வரிடம் நேரடியாக கோரிக்கை வைத்ததாகவும் தெரிவித்தார்.

உண்மையான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், உறவினர்கள் செய்ததாகவும் தாமே பின்னணியில் இருப்பதாகவும் கூறி தன் மீது பழி சுமத்தப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

மாணவர் போராட்டங்கள் குறித்து, மாணவர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் தெளிவாக கூறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். நீட் தேர்வை முழுமையாக நீக்க வேண்டும், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே நிரந்தர தீர்வு என முதல்வர் கூறியதாகவும், போராட்டத்தை முதல்வருக்கு எதிராக திருப்ப முயன்றால் அரசு உரிய முறையில் கையாளும் என்றும் அவர் கூறினார்.