சென்னை: மத்திய அரசு நிதியுதவி வழங்கியிருந்தும், ஒவ்வொரு சொத்துக்கும் தனித்த அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகத்துடன் சேர்த்து ஆறு மாநிலங்கள் மவுனமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
நாடு முழுவதும் சொத்து ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்ற மத்திய அரசு சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் கீழ் கிராம வாரியாக சொத்துகளுக்கான டிஜிட்டல் வரைபடங்கள் தயாரிப்பதும், உரிமை ஆவண விவரங்களை டிஜிட்டலாக்குவதும் நடைபெற்று வருகிறது.
இந்த அடிப்படையில் ஒவ்வொரு சொத்துக்கும் பிரத்யேக எண்ணை ஒதுக்கி, அதற்கான அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் மாநில அரசுகளின் ஒத்துழைப்பு போதிய அளவில் இல்லாத இடங்களில் திட்டம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், நாட்டில் உள்ள 3.38 லட்சம் கிராமங்களில் 3.30 லட்சம் கிராமங்களுக்கு டிஜிட்டல் வரைபடப் பணிகள் முடிந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், 1.97 லட்சம் கிராமங்களில் 3.24 கோடி சொத்துகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மத்திய பிரதேசம், குஜராத், ஹரியானா, கர்நாடகா, ராஜஸ்தான், கோவா, உத்தரகண்ட் போன்ற மாநிலங்கள் இறுதி கட்டத்தில் உள்ளன. ஆனால் தமிழகத்துடன் தெலுங்கானா, கேரளா, சிக்கிம், அசாம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பணிகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் சொத்து ஆவணங்கள் அதிக அளவில் டிஜிட்டலாக்கப்பட்டிருந்தாலும், அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடங்கப்படவில்லை; புதிய அரசு எடுக்கும் முடிவை பொறுத்தே திட்டம் முன்னேறும் என அதிகாரி கூறினார்.





