சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அறைகள் உள்ளிட்ட பகுதிகளுக்குள் சென்று சிலர் வீடியோ பதிவு செய்து, அதை சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ ஆக வெளியிடுவது பாதுகாப்பு போலீசாரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு மே 10 அன்று பதவியேற்றதற்குப் பிறகு, அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்திக்கவும், முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிக்கவும் மாநிலம் முழுவதும் இருந்து பலர் தலைமைச் செயலகத்திற்கு வருவதால் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து நுழைவாயில்களில் மூன்று ஷிப்ட் அடிப்படையில் 24 மணி நேரமும் போலீசார் பணியில் இருந்து பாதுகாப்பு கெடுபிடிகளை அதிகரித்துள்ளனர்.

தலைமைச் செயலகத்திற்குள் செல்லும் நபர்களிடம் வருகையின் காரணம், யாரைச் சந்திக்க வேண்டும், முன் அனுமதி உள்ளதா என்பன குறித்து கேள்விகள் எழுப்பி உறுதி செய்யப்படுவதாகவும், உரிய ஆவணங்களுடன் வருபவர்களுக்கே அனுமதி வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அமைச்சர்களைச் சந்திக்க அனுமதி பெற்று வரும் த.வெ.க. ஆதரவாளர்களில் சிலர் தலைமைச் செயலகத்தைச் சுற்றி வீடியோ பதிவு செய்து, நுழைவாயிலில் தொடங்கி அமைச்சரைச் சந்திக்கும் வரை முழு பயணத்தையும் ரீல்ஸாக வெளியிட்டு, எந்தெந்த பகுதிகள் வழியாக செல்லலாம் என்பதையும் பகிர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கனிமவளத்துறை அமைச்சர் பிரபுவைச் சந்தித்ததை ஒரு இளம்பெண் ரீல்ஸாக வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த வீடியோவில் அமைச்சர்கள் மற்றும் துறை செயலர்கள் பயன்படுத்தும் வி.ஐ.பி. லிப்டில் பயணம் செய்து அமைச்சரைச் சந்தித்து ஆலோசனை நடத்தும் காட்சிகளும் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. தலைமைச் செயலகத்திற்குள் எடுக்கப்படும் இத்தகைய வீடியோக்கள் சமூக விரோதிகளின் கைகளுக்கு செல்லக்கூடிய அபாயம் இருப்பதால், இதுபோன்ற படப்பதிவுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.