ரயில் பெட்டிகளின் மேற்கூரைகளில் சோலார் தகடுகளை பொருத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் சோதனை முயற்சியை வடக்கு மத்திய ரயில்வே தொடங்கியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் தேர்வு செய்யப்பட்ட இரண்டு ரயில் பெட்டிகளில் இந்த முயற்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கரியமில வாயு வெளியீட்டை குறைக்கும் நோக்கில் ரயில்வே பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் சூரிய சக்தி சாதனங்கள் மற்றும் காற்றாலைகள் அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்தும் நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன.
மேலும், ரயில் நிலையங்களின் மேற்கூரைகளில் தனியார் பங்களிப்புடன் சோலார் சாதனங்கள் பொருத்தப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
புதிய முயற்சியில், பெட்டியின் மேற்கூரையில் அமைக்கப்பட்ட சோலார் தகடுகள் மூலம் உருவாகும் மின்சாரம் பேட்டரிக்கு அனுப்பப்படுகிறது. பின்னர் அந்த மின்சாரம் பெட்டிக்குள் உள்ள மின் விளக்குகள், மின் விசிறிகள் மற்றும் மொபைல் சார்ஜிங் வசதிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
தற்போது இரண்டு பெட்டிகளில் சோதனை அடிப்படையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இனி மாதந்தோறும் இரண்டு பெட்டிகளில் சோலார் சாதனங்களை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் நாடு முழுவதும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.





