காவிரி நீர் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்காக கர்நாடகம் செல்லும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக முதல்வர் விஜய்க்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெளியிட்ட அறிக்கையில், கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது “சதிவலை” போன்றதாக அமையக்கூடும் என்றும், இது தேவையற்ற ஆபத்தான முயற்சி என்றும் அவர் குறிப்பிட்டார். பல ஆண்டுகளாக சட்டப்பூர்வமாகப் போராடி பெற்ற உரிமைகள் பாதிக்கப்படும் நிலை உருவாகலாம் எனவும் தெரிவித்தார்.
மேலும், இத்தகைய பேச்சுவார்த்தை முயற்சிகள் நீதிமன்ற நடவடிக்கைகளில் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்று ஸ்டாலின் எச்சரித்தார். இதனால்தான் கடந்த காலங்களில் இதுபோன்ற யோசனைகள் முன்வந்தபோது திமுக உறுதியாக மறுத்ததாகவும் கூறினார்.
கூட்டணி காரணங்களால் தமிழகத்தின் காவிரி உரிமை பணயமாகக் கூடாது என்பதே டெல்டா விவசாயிகளின் ஒருமித்த குரல் என அவர் தெரிவித்தார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, விவசாயச் சங்கங்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், பேச்சுவார்த்தைக்காக கர்நாடகம் செல்லும் முடிவை முதல்வர் கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.





