நீதிமன்ற நடவடிக்கைகளை முன் அனுமதி இல்லாமல் ஆடியோ அல்லது வீடியோ வடிவில் பதிவு செய்வது, பிரித்தெடுப்பது, பதிவேற்றம் செய்வது அல்லது சமூக ஊடகங்களில் பகிர்வது ஆகியவற்றுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.

பத்திரிகையாளர் ஒருவர் தாக்கல் செய்த பொது நல மனுவை விசாரித்தபோது இந்த உத்தரவு வெளியானது. நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து சில பகுதிகளை மட்டும் தேர்வு செய்து, சூழ்நிலையை கருத்தில் கொள்ளாமல் பரப்புவது நீதிமன்றங்களின் கண்ணியத்தையும் நீதித்துறையின் மீதான பொதுநம்பிக்கையையும் பாதிப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

விசாரணையில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நீதிபதிகள் அல்லது வழக்கறிஞர்களின் வார்த்தைகளை மாற்றி அமைத்து சமூக ஊடகங்களில் பரப்ப முடியும் என்ற அபாயத்தை சுட்டிக்காட்டினார்.

நீதிமன்ற உத்தரவின்படி, ஐகோர்ட் பதிவாளர்கள் அல்லது சுப்ரீம் கோர்ட் செயலாளர் ஜெனரலின் அனுமதி இல்லாமல் நீதிமன்ற நடவடிக்கைகளை ஆடியோ/வீடியோவாக பிரித்தெடுப்பது, மாற்றம் செய்வது, பதிவிடுவது, மறுபதிவிடுவது, பதிவேற்றம் செய்வது அல்லது அதன் மூலம் வருமானம் ஈட்டுவது கூடாது. அதே நேரத்தில், நீதிமன்ற நடவடிக்கைகளை செய்தியாக வெளியிடுவதில் இது பாதிப்பை ஏற்படுத்தாது; கருத்துச் சுதந்திரத்தைத் தடுக்கும் உத்தரவாகவும் கருதக்கூடாது எனவும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

மேலும், மெட்டா, எக்ஸ் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. நேரலை ஒளிபரப்புக்கு முன் அனுமதி அவசியம் என்றும், வீடியோ கான்பரன்ஸ் வழி விசாரணைகளில் கட்டுப்பாடின்றி அணுகல் ஏற்படுவது குறித்து கவலை தெரிவித்து ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் அமர்வு குறிப்பிட்டது. தலைமை நீதிபதி தனது கருத்துகள் மற்றும் வழக்கு தொடர்பான தகவல்கள் ஊடகங்களில் தவறாக வெளியிடப்பட்டதாகவும் எடுத்துக்காட்டினார்.