நீட் இளநிலை தேர்வில் தொடர்ச்சியாக நிகழும் குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், வினாத்தாள் கசிவு விவகாரத்தை இனி இப்படியே தொடர விட முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தன. பல ஆண்டுகளாக மத்திய அரசு எடுக்கும் தற்காலிக/அவசர நடவடிக்கைகள் தொடர்ந்து சிக்கல்களை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிமன்றம், தற்கால தீர்வுகளை விடுத்து தேர்வு முறையில் நிரந்தர மாற்றங்கள் தேவை என வலியுறுத்தியது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அமர்வு தெரிவித்தது. மேலும், நீட் தேர்வை கணினி வழியில் நடத்துவது, தரவு பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து விளக்கம் அளிக்கவும், ஆன்லைன் முறையில் வினாக்கள் கசியாமல் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளை தெரிவிக்கவும் உத்தரவிட்டது.
மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அரசு இந்த பிரச்னையை தீவிரமாக கையாள்ந்து வருவதாக கூறினார். வினாத்தாள் அச்சடிப்பு முதல் தேர்வு நாளன்று மாணவர்களுக்கு வழங்கப்படும் வரை அனைத்து நிலைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ராதாகிருஷ்ணன் கமிட்டியின் பரிந்துரைகளை தேசிய தேர்வு முகமை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்கான திட்டங்கள் மற்றும் பதில்களை உள்ளடக்கிய விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்தனர்.





