அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான (EWS) 10% இடஒதுக்கீட்டை தமிழகத்தில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் விஜய்க்கு எழுதிய கடிதத்தில், EWS பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தற்போதைய இடஒதுக்கீடு வரம்புக்குள் வராத பொதுப் பிரிவினருக்கு பயன் கிடைக்கும் என்றும், EWS தகுதி வரையறைகளை மத்திய அரசு நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கேரளா உள்ளிட்ட சுமார் 20 மாநிலங்கள் இந்த இடஒதுக்கீட்டை ஏற்கனவே அமல்படுத்தியுள்ள நிலையில், சமூக நீதியில் முன்னணி மாநிலமாக கருதப்படும் தமிழகம் இதை இன்னும் நடைமுறைப்படுத்தாதது வியப்பாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

சமூக நீதி என்பது சமூக சமநிலையின்மையுடன் பொருளாதார சமநிலையின்மையையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் விலக்கப்படுவது சரியல்ல என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், ஓட்டு வங்கி அரசியலுக்காக சிலர் பொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்க்கிறார்கள் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே தமிழகத்தில் 10% EWS இடஒதுக்கீட்டை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது சமூக ஏற்றத்தாழ்வுகளை மாற்றியமைப்பதில் முக்கிய பங்காற்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.