தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிகளை நடத்துவதில் அதிகாரிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். காரணம், இரு அமைச்சர்களுக்கிடையே நீடிக்கும் நெறிமுறை (புரோட்டோகால்) மற்றும் முக்கியத்துவம் தொடர்பான மோதல் போக்கே என கூறப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக வேளாண் துறை அமைச்சர் வினோத் (கும்பகோணம் எம்.எல்.ஏ.) உள்ளார். பாபநாசம் எம்.எல்.ஏ.வும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் மற்றொருவர். அமைச்சரவை வரிசைப்படி ஷாஜகான் உயர்ந்த இடத்தில் இருப்பதால், அரசு நிகழ்ச்சிகளில் அதற்கேற்ப பெயர் வரிசை உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது விதி என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், வேப்பத்தூரில் முடிவுற்ற கட்டடங்களை திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்கான பேனர்கள் மற்றும் நிகழ்ச்சி நிரலில் விதிமுறையின்படி ஷாஜகான் பெயர் முதலில் இடம் பெற்றதாக கூறப்படுகிறது. இதற்கு வினோத் எதிர்ப்பு தெரிவித்து, பொறுப்பு அமைச்சர் என்ற முறையில் தனது பெயர் மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும் கல்வெட்டுகளிலும் அதேபோல் இருக்க வேண்டும் என்றும் கூறி திறப்பு விழாவை புறக்கணித்ததாக தகவல். இதையடுத்து கலெக்டர் ரேவதி, வினோத்தை விழாவுக்கு வரவழைக்க ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசி முயன்றதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் ஷாஜகான் விழாவிற்கு வந்த நிலையில், அதிகாரிகள் வினோத்திடம் தகவல் தெரிவித்து ஒரு கட்டடத்தை மட்டும் திறக்க அனுமதி பெற்றனர். ஷாஜகான் பேரூராட்சி புதிய அலுவலக கட்டடத்தை திறந்து வைத்து சென்றார். பின்னர் மற்ற கட்டடங்களை ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளை அதிகாரிகள் ரத்து செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், கும்பகோணம் மருத்துவமனையில் புதிய ஆய்வகம் திறப்பு விழாவை வினோத் தனியாக நடத்தினார். மேலும் தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் மற்றொரு கட்டட திறப்பு விழாவை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தினார்; இதில் ஷாஜகான் பங்கேற்கவில்லை. இரண்டு அமைச்சர்களிடமும் அனுமதி பெற்று அரசு விழாக்களை ஏற்பாடு செய்வது பெரிய தலைவலியாகிவிட்டதாக அதிகாரிகள் கூறி, இந்த பிரச்னைக்கு முதல்வர் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.





