தமிழகத்தில் பொதுப்பணித் துறை (PWD) கட்டுப்பாட்டில் உள்ள பாரம்பரிய கட்டடங்களை புனரமைத்து பாதுகாத்து, அவற்றை வருவாய் ஈட்டும் வகையில் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மன்னர்கள், முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சி காலங்களில் கட்டப்பட்ட 264 பாரம்பரிய கட்டடங்கள் மாநிலத்தில் உள்ளன. இதில் சென்னை 58 கட்டடங்களுடன் முதலிடத்தில் உள்ளது; கோவை 20, தஞ்சாவூர் 17. கன்னியாகுமரி, மதுரை, சேலம் ஆகிய மாவட்டங்களில் தலா 12; புதுக்கோட்டையில் 10; திருப்பூர் மற்றும் திருவண்ணாமலையில் தலா 9 கட்டடங்கள் உள்ளன. மற்ற மாவட்டங்களில் ஒன்றிரண்டு கட்டடங்கள் மட்டுமே உள்ளன.

இந்த கட்டடங்களில் பல, மருத்துவம், நீதித்துறை, உயர்கல்வி, வருவாய் உள்ளிட்ட துறைகளின் அலுவலகங்களாக பயன்படுத்தப்படுகின்றன. சில கட்டடங்கள் சிதைந்த நிலையில் உள்ளன. பாரம்பரிய மதிப்பை புரியாமல் சில துறைகள் கட்டடங்களின் பழமையை மாற்றியும், பராமரிப்பை புறக்கணித்தும் சேதப்படுத்துகின்றன என்று பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மிக மோசமான நிலையில் உள்ள கட்டடங்களை கண்டறிந்து புதுப்பிக்கும் பணிகள் தற்போது நடந்து வருவதாகவும், இதற்காக கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஆனால் புதுப்பிக்கப்பட்ட கட்டடங்களை மீண்டும் அரசு அலுவலகங்களுக்கு ஒதுக்கினால், அவை மீண்டும் சேதமடையும் வாய்ப்பு அதிகம் என பொதுப்பணித் துறை கருதுகிறது.

இதனால், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மாற்றி, வருவாய் நோக்கில் பயன்படுத்த சுற்றுலாத் துறையுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சுற்றுலாத்துறை இதை ஏற்காவிட்டால், பொதுப்பணித் துறை சார்பில் ஒளி-ஒலி காட்சி மற்றும் கபே போன்ற வசதிகளை அமைப்பது குறித்தும் ஆலோசனை நடைபெறுகிறது.