தமிழகத்தில் புதிதாக முன்வைக்கப்படும் மனைப்பிரிவு திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்த, மாநகராட்சிகள் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன. இதன் மூலம், இறுதி ஒப்புதலை 30 நாளுக்குள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கட்டுமான திட்டங்களைப் போல மனைப்பிரிவு திட்டங்களுக்கும் விரைவாக ஒப்புதல் வழங்க அரசு உத்தரவிட்ட நிலையில், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் நகர் மற்றும் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி.யில் விண்ணப்பிக்கின்றன. ஆனால், அடுத்தடுத்த நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்ததாக கூறப்படுகிறது.

நடைமுறையின்படி, மனைப்பிரிவு தொடர்பான அடிப்படை விவரங்களை ஆய்வு செய்து டி.டி.சி.பி. தொழில்நுட்ப அனுமதி வழங்கும். அதன் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகள் முறையான இறுதி ஒப்புதலை வழங்க வேண்டும்.

வழிகாட்டுதல்களில், டி.டி.சி.பி. தொழில்நுட்ப அனுமதி கிடைத்ததும், ஓ.எஸ்.ஆர். நில ஒப்படைப்புக்கான தான பத்திரத்துடன் விண்ணப்பதாரர் மாநகராட்சியை அணுக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடிப்படை வசதிகள் பராமரிப்புக்காக ரூ.1 லட்சம் வைப்பு தொகை பெற வேண்டும்; ஒப்புதல் தொடர்பான அனைத்து பணிகளும் ஆன்லைன் வழியாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.

அடிப்படை வசதிகளுக்கான முழுத் தொகையையும் மனுதாரர் செலுத்தும் நிலையில், 30 நாளுக்குள் இறுதி ஒப்புதல் வழங்க வேண்டும். மனுதாரரே அடிப்படை வசதி பணிகளை மேற்கொள்ளும் நிலையில், 60 நாளுக்குள் மனைப்பிரிவு ஒப்புதல் வழங்கப்பட வேண்டும் எனவும் வழிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.