தமிழகத்தில் பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப்புகளில் ஆண்களை விட பெண்கள் தலைமையிலான நிறுவனங்கள் அதிகமாக உள்ளன.

இளையோரின் புத்தாக்க சிந்தனையை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன. இதன் காரணமாக, சமீப காலங்களில் பல பட்டதாரிகள் வேலைக்கு செல்லுவதற்குப் பதிலாக தாங்களே புதிய தொழில்களை தொடங்கும் போக்கு அதிகரித்துள்ளது.

ஸ்டார்ட் அப் அங்கீகாரம் பெற, மத்திய வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்தும் துறையில் (DPIIT) பதிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் நிதியுதவி, முதலீட்டு வாய்ப்பு, சந்தை அணுகல் உள்ளிட்ட உதவிகளை ‘ஸ்டார்ட் அப் டி.என்.’ (StartupTN) மேற்கொள்கிறது.

தற்போது தமிழகத்தில் மொத்தம் 15,037 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. இதில் பெண்கள் தலைமையில் 7,572 நிறுவனங்களும், ஆண்கள் தலைமையில் 7,465 நிறுவனங்களும் செயல்படுகின்றன; ஆண்களை விட பெண்கள் தலைமையில் 107 நிறுவனங்கள் அதிகம்.

மாவட்ட வாரியாக சென்னை 5,134 ஸ்டார்ட் அப்புகளுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக கோவை (2,011), காஞ்சிபுரம் (1,318), திருவள்ளூர் (916), செங்கல்பட்டு (815), மதுரை (497), திருச்சி (446), சேலம் (403), ஈரோடு (350), கிருஷ்ணகிரி (239) ஆகிய மாவட்டங்கள் ‘டாப் 10’ பட்டியலில் இடம்பெற்றுள்ளன.