சென்னை: முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மட்டுமல்ல, யாரிடமிருந்தும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் வந்தால் அவற்றை கருத்தில் கொள்ள அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் ஆதவ் தெரிவித்தார். அரசுக்கு குறுகிய அரசியல் நோக்கம் இல்லை என்றும் அவர் கூறினார்.
காவிரி நதிநீர் பிரச்னை மற்றும் மேகதாது அணை தொடர்பாக முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற அடிப்படையில் ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள் உண்மைக்கு முரணானவை என அமைச்சர் கூறினார்.
டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம், மாநிலத்தின் குடிநீர் பாதுகாப்பு மற்றும் தமிழகத்தின் சட்டப்பூர்வ நீர் உரிமை ஆகியவற்றை பாதுகாப்பதற்காக அரசு தொடர்ந்து உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டங்களில் தமிழக நீர்வளத்துறை தொடர்ந்து தமிழக உரிமைகளை வலியுறுத்தி வருவதாகவும் கூறினார்.
தமிழகத்துக்குரிய நீரை உரிய காலத்தில் திறந்துவிட வேண்டும் என்பதையும், கர்நாடக அரசின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதையும் அரசு தொடர்ந்து பதிவு செய்து வருவதாக ஆதவ் கூறினார். தமிழகத்தின் உரிமையைப் பாதுகாக்க சட்டரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வர் தலைமையிலான அரசு முன்னெடுத்து வருவதாகவும், கடந்தகால குளறுபடிகளை பேசுவதன் மூலம் உரிமைக் குரலை திசைதிருப்ப விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.
காவிரி நீர் உரிமை அரசியல் சார்ந்த பிரச்னை அல்ல; அது தமிழக மக்களின் வாழ்வுரிமை, டெல்டா விவசாயிகளின் எதிர்காலம் மற்றும் மாநிலத்தின் நீராதார பாதுகாப்புடன் தொடர்புடைய அடிப்படை உரிமை பிரச்னை என அமைச்சர் வலியுறுத்தினார். காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் முழுமையாக அமல்படுத்தப்படும் வரை, அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட அனைத்து சட்டப்பூர்வ வழிமுறைகளிலும் அரசு தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும் அவர் கூறினார்.





