சென்னை: அரசு வேலைவாய்ப்பு தேர்வுகளில் முறைகேடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என ‘வீ தி லிடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். முறைகேடு குறித்த புகார்கள் தீராத நிலையில் பணி நியமன ஆணைகள் வழங்குவது, நேர்மையாகத் தேர்வு எழுதிய இளைஞர்களுக்கு செய்யும் துரோகம் எனவும் அவர் கூறினார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் (MRB) சார்பில் சுகாதார ஆய்வாளர் (நிலை–II) பணியிடங்களுக்கான கணினி வழித் தேர்வு 2025 டிசம்பர் 7 அன்று நடைபெற்றதாக குறிப்பிட்டார். தேர்வு மையங்களில் விதிமீறல்கள், செல்போன் பயன்பாடு, கண்காணிப்பாளர்களின் ஒத்துழைப்புடன் நடந்த முறைகேடுகள், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல புகார்களை தேர்வெழுதியவர்கள் முன்வைத்ததாகவும் தெரிவித்தார்.

இந்த புகார்களைத் தொடர்ந்து 2026 பிப்ரவரி 24 அன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தும், விசாரணை இன்னும் முடிவடையவில்லை என அண்ணாமலை சுட்டிக்காட்டினார். இந்நிலையில் தேர்ச்சி பட்டியலை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசு பணி நியமன ஆணைகள் வழங்கியிருப்பது முற்றிலும் தவறு என அவர் விமர்சித்தார்.

நீதிமன்ற அறிவுறுத்தலை காரணமாக்கி அரசு விளக்கம் அளிக்கலாம் என்றாலும், முறைகேடு புகார்களின் தீவிரத்தையும், சிபிசிஐடி விசாரணை நிலுவையையும் நீதிமன்றத்தில் அரசு தெளிவாக எடுத்துக் கூறியிருக்க வேண்டும் என அவர் கூறினார். மேலும் அனைத்து தேர்வு மையங்களின் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; 2025 டிசம்பர் 7 தேர்வை உடனடியாக ரத்து செய்து கடுமையான கண்காணிப்புடன் முழு வெளிப்படைத்தன்மையுடன் மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.