சேலம்: பாமக முன்னாள் எம்எல்ஏ அருள், சமீபத்தில் புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமியை சந்தித்து பேசியுள்ளார். அந்த சந்திப்பில், என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் அருள் இணைவது தொடர்பாகவும் ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது.
காமராஜர் பிறந்தநாள் மற்றும் ரங்கசாமி பிறந்தநாள் விழா ஆகஸ்ட் 9-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சியில் தமிழக என்.ஆர். காங்கிரஸ் தலைவராக அருள் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அருள் கூறியதாவது: மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்து எதிர்கால அரசியல் நிலவரம் குறித்து ஆலோசித்தேன். அவரது கட்சியில் இணைவது குறித்து தற்போது பரிசீலனை நடைபெறுகிறது.
ஆதரவாளர்கள் ‘கிரீன் சிக்னல்’ கொடுத்துள்ளதாகவும், சென்னையில் நடைபெறும் விழாவுக்கு அழைப்பு வந்துள்ளதாகவும் கூறிய அவர், தானும் ஆதரவாளர்களுடன் கலந்து கொள்வதாக தெரிவித்தார். தனது முடிவு அரசியல் திருப்புமுனையாக அமையும் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, அருளின் நேர்முக உதவியாளர் விஜய் தனது முகநூல் பதிவில், அருள் என்.ஆர். காங்கிரஸில் இணைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.




