பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடந்த நீதிமன்ற விசாரணையில், சவுதி இளவரசர் அப்துல்லா பின் பஹத் (29) அதிக அளவில் மது மற்றும் போதைப்பொருட்களை உட்கொண்டதன் விளைவாக ஏற்பட்ட மாரடைப்பே அவரது மரணத்திற்கு காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் லண்டன் சென்ற அவர், ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில், தனது அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். தொடக்கத்தில் இது மர்மமான மரணமாக குறிப்பிடப்பட்டது.

ஹோட்டல் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், அவரது அறைக்குள் வேறு யாரும் சென்றதாக ஆதாரம் இல்லை என விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உடற்கூராய்வு முடிவுகளில், நச்சுவியல் அறிக்கையின் அடிப்படையில் அவரது ரத்தத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மூன்று மடங்கு அதிகமாக ஆல்கஹால் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், விருந்துகளில் பயன்படுத்தப்படும் வீரியமிக்க போதைப்பொருள் ஒன்றும், மன அழுத்தத்தை குறைக்கும் சக்திவாய்ந்த மாத்திரைகளின் கலவையும் உடலில் இருந்ததாக கூறப்பட்டது.

இந்த ஆபத்தான கலவையால் ஏற்பட்ட மாரடைப்பே உயிரிழப்புக்குக் காரணம் என விசாரணை முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.