சத்தீஸ்கர் மாநில பணியாளர் தேர்வாணையத்தின் (பிஎஸ்சி) முன்னாள் தலைவர் டாமன் சிங் சோன்வானி (64) வினாத்தாள் கசிவு மற்றும் ஆட்சேர்ப்பு முறைகேடுகள் தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை (ED) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாநிலத்தில் 2018 முதல் 2023 வரை காங்கிரஸ் ஆட்சி இருந்த காலகட்டத்தில், 2020 மற்றும் 2021-ல் பிஎஸ்சி நடத்திய தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்ததாகவும், சில தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து 2024-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

அந்த காலத்தில் பிஎஸ்சி தலைவராக இருந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான டாமன் சிங் சோன்வானியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அரசுப் பணிகளில் குடும்ப உறுப்பினர்களை நியமிக்க ஏதுவாக தேர்வாணைய விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இதே வழக்கில் 2024-ல் சிபிஐ அவரை கைது செய்த நிலையில், தற்போது அவர் ஜாமினில் உள்ளார்.

மேலும், மாவட்ட துணை கலெக்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த சிலரிடம் லஞ்சம் பெற்றதாகவும், அதை திருப்பித் தராமல் ஏமாற்றியதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. அதில் ஒரு பகுதி ரொக்கமாகவும், மற்றொரு பகுதி குடும்பத்தின் பெயரில் உள்ள அமைப்புக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்பட்டதால், வழக்கு அமலாக்கத் துறைக்கு மாற்றப்பட்டது.

டாமன் சிங் சோன்வானி மற்றும் அவரது குடும்பத்தாரிடம் விசாரணை நடத்திய பிறகு, பணமோசடி தடுப்பு சட்டத்தின் (PMLA) கீழ் நேற்று அவரை அமலாக்கத் துறை கைது செய்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின், மேலதிக விசாரணைக்காக காவல் கோரவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.