கோவை கோனியம்மன் கோவிலில் உண்டியல் பணம் திருடப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் மொத்தம் 8 பேரை சஸ்பெண்ட் செய்ய அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார். இதில் நேரடியாக தொடர்புடையவர்கள் மட்டுமல்லாமல், கண்காணிப்பில் தவறிய அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர்.
தகவலின்படி, கோவில் வளாகத்தில் 16 உண்டியல்கள் உள்ளன. இதில் 9 நிரந்தர உண்டியல்கள், திருப்பணிக்கான நன்கொடை வசூலிக்க 1 உண்டியல் மற்றும் தேர்த்திருவிழாவை ஒட்டி 6 தற்காலிக உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தன. பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணும் பணி ஜூலை 15 அன்று காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் ஒரு உண்டியலில் உள்ள பணத்தை எடுக்காமல், ஏற்கனவே எண்ணப்பட்ட உண்டியல்களுடன் சேர்த்து மறைத்து வைத்ததாகவும், இதை அதிகாரிகள் கவனிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ் குமார் நடத்திய விசாரணையில் 4 ஊழியர்கள் கூட்டு சேர்ந்து உண்டியலை மறைத்து வைத்து பணத்தை திருடியது உறுதியானதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள்: ஊழியர்கள் பாலசுப்பிரமணியன், சரவணன், பிரதீப் குமார், கிருஷ்ணராஜ்; அதிகாரிகள் ராம்குமார், உதயகுமார், குமார், உஷா நந்தினி.





